இத்தாலி பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் மோடி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா சென்ற பிரதமர் மோடி அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை சந்தித்தார். இதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத வரியை விதிக்குமாறு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
”பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் சிறந்த உரையாடல் நடைபெற்றது. இந்தியா-இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். மேலும் உக்ரைனில் மோதலை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டோம். IMEEEC முன்முயற்சி மூலம் பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இத்தாலி அளித்த முன்முயற்சியான ஆதரவிற்காக பிரதமர் மெலோனிக்கு நன்றி தெரிவித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் வரிகளை உயர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்த அன்றே இத்தாலிய பிரதமருடனான பிரதமர் மோடியின் உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.