கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறுத்திவைப்பு! எதிர்ப்பு அதிகரித்ததால் சித்தராமையா விளக்கம்!
கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது கர்நாடக அரசு.
கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட அந்த மசோதாவுக்கு நேற்று முன்தினம் (ஜூலை 15) முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருந்தது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாக அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடு இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் மசோதாவின்படி, "கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர்கள் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் திறன் கொண்டவர் இதற்கான தகுதியான நபர். மேலும், விண்ணப்பதாரர்கள் கன்னடத்தை ஒரு மொழியாகக் கொண்ட மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
மேலும், தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து, உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும். நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்கத் தவறினால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து, முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில் : "அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களும் ‘சி’ மற்றும் ‘டி’ குரூப் பணிகளில் 100% கன்னடர்களை மட்டுமே பணியமர்த்துவதை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கு கர்நாடகாவில் இயங்கி வரும் முன்னணி தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டுமே தவிர தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த கடும் எதிர்ப்பால் கன்னடர்களுக்கு 100% வேலை மசோதா தொடர்பான தமது எக்ஸ் பக்க பதிவை முதல்வர் சித்தராமையா நீக்கி இருக்கிறார். மேலும் கன்னடர்களுக்கான அரசுதான் தமது அரசு எனவும் விளக்கம் தந்துள்ளார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், முதலீட்டாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கர்நாடகாவுக்கு அதிக முதலீட்டாளர்கள் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். கன்னடர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கவலை. கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஆராய்வோம் என்றார்.
இதனிடையே இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், கன்னடர்களுக்கு 100% வேலை தர கோரும் மசோதா இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார். அதாவது கர்நாடகா தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வழங்க வேண்டும் என்கிற மசோதாவை கர்நாடகா அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
The draft bill intended to provide reservations for Kannadigas in private sector companies, industries, and enterprises is still in the preparation stage.
A comprehensive discussion will be held in the next cabinet meeting to make a final decision.
— Siddaramaiah (@siddaramaiah) July 17, 2024