மதுரா ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஈத்கா மசூதி ஆகியவை பல வருடங்களாக அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிருஷ்ண ஜென்ம பூமியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னன் அவுரங்கசீப் 1670களில் மசூதி கட்டியதாக இந்துத்துவ அமைப்புகளின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
கிருஷ்ணர் கோயிலும், மசூதியும் அருகருகே அமைந்திருப்பதால், மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அங்கு கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் என, கிருஷ்ண ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2023 டிசம்பர் 14ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி ஆண்டு 16ம் தேதி விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அலகாபாத் உயர்நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என மசூதி கமிட்டி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் ஷாஹி ஈத்கா மசூதி அறக்கட்டளை மேலாண்மைக் குழுவின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இன்று விசாரித்தது. இந்த விசாரணையில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள் ஷாஹி ஈத்கா மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த தடை விதித்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.