"அதிகாரிகள் என்னை மிரட்டுகிறார்கள்... மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்" - நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு!
கன்னட திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் ரன்யா ராவ். இவர், கர்நாடக போலீஸ் வீட்டுவசதித்துறை டி.ஜி.பி.யான ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகள் ஆவார். இந்த சூழலில், கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்த ரன்யா ராவ், டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரன்யா ராவின் காவல் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியை பார்த்ததும் ரன்யா ராவ் திடீரென்று கண்ணீர் விட்டு அழுத தொடங்கினார். உடனே விசாரணையின் போது அதிகாரிகள் தொல்லை கொடுத்தார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது அழுதபடியே பேசிய ரன்யா ராவ், "விசாரணையில் அவர்கள் என்னை அடிக்கவில்லை.
ஆனால், 'நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நடக்கும் என உங்களுக்கு தெரியும்' என சொல்லி மிரட்டுகிறார்கள். மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டி தீர்க்கின்றனர். இது கடும் மன உளைச்சலை தருகிறது. சில ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன். மற்றபடி விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்" என்றார்.
ரன்யா ராவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதகாரிகள் முன்வரவில்லை. இதையடுத்து, வருகிற 24-ம் தேதி வரை ரன்யா ராவை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் மீண்டும் ரன்யா ராவ் அடைக்கப்பட்டார்.