நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் லாகி ஃபெர்க்யூசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆடம் மில்னே, பென் சியர்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 102 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிளன் பிளிப்ஸ் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.