முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடி! நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் கடந்த அக்.5ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. ஆஸி.யின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்தின் பௌலர்களை அடித்து நொறுக்கினார்கள். வார்னரும், ஹெட்டும் 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் . வார்னர் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் காயத்துக்குப் பிறகு ஆடிய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி சதமடித்து 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பேட்டர்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் இறுதியில் மேக்ஸ்வெல்-பாட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடினார்கள். இறுதியாக 49.2 ஓவர் முடிவில் ஆஸி. 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் மார்ஷ்- 36, மேக்ஸ்வெல்- 41, பாட் கம்மின்ஸ் - 37, இங்கிலிஷ்- 37, ஸ்மித்- 18, லபுஷேன் - 18, ஸ்டார்க்- 1, ஜாம்பா - டக் அவுட். நியூசிலாந்து அணி சார்பாக க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக பந்து வீசினார். பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். சான்ட்னர் 2 விக்கெட்டுகளும் மேட் ஹென்றி, ஜிம்மி நீஷம் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு 400+க்கு அதிகமான ரன்கள் வரவேண்டிய போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக கம் பேக் கொடுத்து கட்டுப்படுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டெவன் கன்வே மற்றும் வில் யங் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அதிரடியாக சேர்த்த டெவன் கன்வே, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஹசல்வுட் பந்தில் அவுட் ஆனார்.