குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் தப்பியோடிய நபர்! சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து கைவரிசை!
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஏலத்தில் விடும் தங்க நகையை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் ஒரு நபர் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் ஒத்தக்கடை பகுதியில் உள்ள மதுபானக் கடையில் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கு சங்கர் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சங்கர் தன்னை வங்கி ஊழியர் என கூறிக் கொண்டதுடன், வங்கி நகைகளை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து தருவதாக ஸ்ரீஹரியிடம் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய ஸ்ரீஹரி, அது போல ஏதாவது நகை ஏலத்திற்கு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து நேற்று ஸ்ரீஹரியை தொடர்பு கொண்ட சங்கர், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நகை ஏலம் விடப்படுவதாக கூறியிருக்கிறார். அதோடு, 23 சவரன் நகையை ரூ.5 லட்சத்திற்கு குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து தருவதாக கூறியதுடன் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வர ஸ்ரீஹரியை வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகம் வந்த ஸ்ரீஹரியிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்ட சங்கர், மேல்தளத்தில் இருந்து நகையை வாங்கி வருவதாக கூறி சென்றிருக்கிறார். இதனை நம்பிய ஸ்ரீஹரி மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்திருக்கிறது. இதனை அடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீஹரி உடனடியாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சங்கரை தீவிரமாக தேடி வரும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஐந்து லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.