கலைஞரின் கனவுப் பல்கலைக்கழகம்: ஆளுநரின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியதா? - செல்வப்பெருந்தகை!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது x தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார் அதில்,
தமிழ்நாடு அரசு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் முதன்மை நோக்கம், டெல்டா மாவட்டங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் உயர்கல்வியின் பங்கைப் பெருக்குவதே ஆகும்.
இந்த மசோதா கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் உள்ள தடைகளை நீக்குவது. புதிய பல்கலைக்கழகம் உருவாகும்போது, அப்பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், கல்வி சார்ந்த பிற தொழில் வாய்ப்புகளும் பெருகும். இது அப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்கள் புதிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
சட்டமன்றத்தில் ஏப்ரல் 28, 2025 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆகஸ்ட் 5, 2025 வரை ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டு, பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது, ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மோதலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் இந்த செயல்பாடு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முடிவுகளை, ஆளுநர் தனது அரசியல் நிலைப்பாட்டால் தாமதப்படுத்துவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளுக்கும் தடையாக அமைகிறது. இது, மாநிலத்தின் சட்டமன்ற அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும், அரசின் செயல்பாடுகளை முடக்குவதாகவும் பல அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மசோதாவின் எதிர்காலம், இப்போது குடியரசுத் தலைவரின் முடிவைப் பொறுத்து உள்ளது. இந்த தாமதம், மாணவர்களின் சேர்க்கை செயல்முறையை பாதிப்பதுடன், பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான திட்டமிடலையும் பாதிக்கிறது. இது தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அரசியல் தலையீடு செய்வதாகக் கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.