"மக்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டணி அமையும்" - அன்புமணி ராமதாஸ்!
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாமகவின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்காக, ஒரு "மெகா கூட்டணி" அமைத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வருவோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, "திமுகவின் தவறான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். இதை தனித்து சாதிக்க முடியாது. எனவே, தொண்டர்களின் விருப்பத்திற்கும்,தமிழ்நாட்டின் நலனுக்கும் ஏற்ப ஒரு பெரிய கூட்டணி அமைக்கப்படும்" என்று கூறினார்.
மேலும், "இந்தக் கூட்டணி தேர்தலுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமூக நீதி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி இந்தக் கூட்டணி செயல்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் பாமக வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. சிலசமயம் அதிமுகவுடனும், சில சமயம் பாஜகவுடனும் கூட்டணி வைத்தது. தற்போது, அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சி புதிய திசையை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், "மெகா கூட்டணி" என்ற அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாமகவின் இந்த புதிய வியூகம், தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
பாமகவின் நிலைப்பாடு இந்தக் கூட்டணி பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க, பாமகவின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. "திமுகவின் ஆட்சி கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்" என அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். எனவே, இந்தப் பிரச்சாரங்களை முன்னிறுத்தி, தங்கள் கூட்டணிக்கு மக்களை ஈர்க்க பாமக முயற்சி செய்யும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.