”கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும், உட்கட்சி விவகாரம் குறித்து பேச விருப்பமில்லை” - அன்புமணி ராமதாஸ் பேட்டி...!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மஞ்சள் நமது நாட்டின் பண்பாட்டில் ஒன்று. ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சளில் 90% குக்மீன் இருக்கிறது. மஞ்சள் கொள்முதலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்ட மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. மஞ்சளுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். திமுக தனது குறைந்தபட்சம் ஆதரவு விலை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மஞ்சளை உலக அளவில் சந்தைப்படுத்த வேண்டும். குளிர்பதன கிடங்கு, ஆராய்ச்சி மையம் ஆகியவை அமைக்க வேண்டும். மஞ்சள் மதிப்பு கூட்டு மையம் உருவாக்க வேண்டும்.
திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். திமுக நல்லது செய்கிறது என ஒரு மக்கள் கூட சொல்லவில்லை. நெல் சாகுபடி தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில் 4கோடியே 80லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கோடியே 70லட்சம் டன் மட்டுமே நெல்லை மட்டுமே அரசு கொள்முதல் செய்துள்ளது. மீதமுள்ள நெல்லை தனியார் கொள்முதல் செய்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு நெல்லை மட்டும் தான் அரசு கொள்முதல் செய்கிறது. மேலும் நெல் சேமிப்பு செய்ய கிடங்கு இல்லை. 1967ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திமுக நெல்லை சேமிக்க அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கவில்லை. தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 513 சேமிப்பு கிடங்கில் 19 லட்சம் டன் நெல்லை தான சேமிக்க முடியும். ஆனால் தேவை 35லட்சம் டன் நெல்லை சேகிக்க கிடங்குகள் வேண்டும்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள் 13விழுக்காடு தான் தேர்தல் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த முறை செம்பரபாக்கம் ஏரியை திறப்பதற்கு அமைச்சர் துரைமுருகன், செல்வ பெருந்தகைக்கு அழைப்பு விடுக்கலாமா? தண்ணீர் திறப்பிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் முடிவு செய்வது தான் சரியானது” என்றார்.
பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கேள்விக்கு உட்கட்சி குறித்து பேச விருப்பமில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.