கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் - சபாநாயகர் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
தொடர் அமளி - அதிமுகவினர் வெளியேற்றம்https://t.co/WciCN2SiwX | #TNAssembly | #AssemblySession | #TNGovt | #SpeakerAppavu | #AIADMK | #EdappadiPalanisamy | #MLA | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/qxzHRcPHNp
— News7 Tamil (@news7tamil) June 26, 2024
தொடர்ந்து, சட்டப்பேரவையின் 4ம் நாளான இன்றும் (ஜூன் 26) அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும்படி சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவர் அப்பாவு முயன்றார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கோஷங்களை எழுப்பியதால் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதிமுக உறுப்பினா்கள் பேரவைத் தலைவரின் இருக்கை முன்பாக நின்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்ய முயன்ற பேரவைத் தலைவர், ‘பேரவையின் மாண்பைக் குலைக்கக் கூடாது. தயவு செய்து அனைவரும் அமருங்கள். அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்றார்.
கடந்த 21-ம் தேதியன்றே, கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பற்றி அவையில் மற்ற உறுப்பினர்கள் பேசி, அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளார். ஒரு கூட்டத் தொடர் நடைபெறும்போது, கவன ஈர்ப்புத் தீா்மானம் கொண்டுவந்து அனைவரும் பேசி, அதற்கு முதல்வரோ, மற்ற அமைச்சர்களோ பதில் சொன்ன பிறகு, அந்தப் பொருள் குறித்து அந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பேசுவதற்கும் அனுமதியில்லை. அவ்வாறு விவாதத்துக்கு எடுப்பது சபை மரபும் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்https://t.co/WciCN2SiwX | #TNAssembly | #AssemblySession | #TNGovt | #SpeakerAppavu | #AIADMK | #EdappadiPalanisamy | #MLA | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/lbWYNffPxV
— News7 Tamil (@news7tamil) June 26, 2024
தொடர்ந்து, சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற சட்டசபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், பேரவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யக் கோரி அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.