"தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" - தவெக தலைவர் விஜய்!
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவதைக் கண்டித்தும், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும், மழை, வெள்ளத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஆனால், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டதாக தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாக விஜய் கூறினார். தான் நேரில் சென்று சந்திக்கலாம் என எண்ணியிருந்தபோது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களே முன்வந்து பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கு வந்து தன்னைச் சந்தித்ததாக விஜய் தெரிவித்தார்.
சந்திப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்த கருத்துகள் "கல் நெஞ்சையும் கரைய வைப்பவை" என்றும், மனிதாபிமானம் இல்லாத, மனசாட்சியற்ற அரசாக தி.மு.க. செயல்பட்டு வருவதாகவும் விஜய் குற்றம் சாட்டினார். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பால்தான் நகரம் சுத்தமாகவும், நோய்த்தொற்றுகள் இல்லாமலும் இருக்கின்றன என்றும், அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக தி.மு.க. அளித்த வாக்குறுதியை மீறிவிட்டதாக விஜய் சாடினார். இது "வெற்று விளம்பர மாடல் தி.மு.க.வின்" சாதனை என்று குறிப்பிட்ட அவர், கடந்த 19.01.2021 அன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும், சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாக நிற்கும் என்றும் விஜய் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.