கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் 2004ஆம் ஆண்டு சூலை 16 ஆம் தேதி பெரும் தீ விபத்தை ஏற்பட்டது. மாநிலத்தையே உலுக்கிய இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். மதிய உணவு அறையில் உணவு தயாரிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்பாலும் கூரையால் ஆன பள்ளி கட்டிடம் பற்றி எறிந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, பள்ளி கட்டிடங்கள் கூரை வேய்ந்ததாக இருக்கக்கூடாது. சத்துணவு சமையல் அறை வகுப்பறைகளை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்பன போல பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டடன.
ஆண்டுதோறும் ஜூலை 16ஆம் தேதி இந்த குழந்தைகளின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதன்படி 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் படங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா் என பலரும் அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.