For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

10:35 AM Nov 03, 2024 IST | Web Editor
தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை
Advertisement

தவெக மாநாட்டுக்கு பின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.

ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது.

தவெக முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.

Tags :
Advertisement