பிரசாந்த் கிஷோர் - தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்திப்பு!
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கிய விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு ஓராண்டாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் 5 கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தார். இதற்கிடையில் அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
அதன்படி தவெகவின் துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் முதல் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை பனையூரில் கட்சியின் தலைமை அலுவலத்தில் நேற்று (பிப்.10) பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜுனாவும் பங்கேற்றார். இந்த பேச்சு வார்த்தையின் முடிவைக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தவெகவின் தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோருடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தேர்தல் வியூகங்கள் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
அதன்படி தவெகவுக்கு ஒரு குடும்பத்திலிருந்து ஒரு வாக்கை உறுதி செய்யுமாறு பிரஷாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும், அதற்கேற்ப அடுத்த கட்ட நகர்வுகளுக்கான வியூகம் அமைக்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்களின் வாக்கை குறி வைத்து தேர்தல் வியூகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.