தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா - பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!
நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை தேர் திருவிழா கடந்த வாரம் வெள்ளி கிழமை 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக வந்த பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.
இதனையடுத்து கோயிலில் இருந்த அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், காவல்துறையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று பூக்குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
மேலும், பக்தர்கள் பலரும் சாட்டையால் அடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில், மக்கள் ஜாதிமத பேதமின்றி ஒற்றுமையுடன் பங்கேற்றனர். தொடர்ந்து முக்கிய தேர்த்திருவிழாநாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.