மீண்டும் மத்திய அமைச்சராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி! - பொறுப்பேற்ற பின் எல்.முருகன் பேட்டி!
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி வழங்கிய பிரதமருக்கு நன்றி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இந்நிலையில், அதிகபட்ச தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டடம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஜூன் 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இலாகாக்கள் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படியுங்கள் : ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!
அப்போது அவர் கூறியதாவது :
"வளர்ச்சியடைந்த நாடு என்ற நோக்கில் செயல்படும் இந்த அரசின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த அமைச்சகத்தில் மீண்டும் பணிபுரிய வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் இந்த முக்கிய அமைச்சகத்தில் மீண்டும் பணி புரிய வாய்ப்பு அளித்த பிரதமருக்கு நன்றி. ஊடகங்களுடன் இணைந்து பணி புரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது"
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.