"காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி... விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்" - #KanganaRanaut
எமர்ஜென்சி திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும், காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் வருகைக்கு பின் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசரநிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’.
இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இதன் டீசர் கடந்த 14-ம் தேதி வெளியானது. படத்தில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக சீக்கிய அமைப்பினர் சார்பில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் மிரட்டுவதாக நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த திரைப்படம் இன்று (செப்.6) வெளியாக இருந்த நிலையில் கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, "நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.