"அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி" - அமைச்சர் சேகர்பாபு!
சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுக ஆட்சியில் இதுவரை 3500 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது, இது வரலாற்றில் நடக்காத ஒன்று. கட்டணமில்லா திருமணம் அறிவித்து இதுவரையில் 1800 திருமணங்கள் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த ஆண்டு மேலும் ஆயிரம் திருமணங்கள் என்று அறிவிக்கப்பட்டு இதுவரைகள் 20537 திருமணங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் நான்கு கிராம் தங்க உட்பட அனைத்து பொருட்களுமே இலவசமாக தம்பதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோவில் நிலங்கள் மீட்டது, 1026 திருக்கோவிலின் ஆக்கிரமிப்பு 7923 ஏக்கர் நிலங்கள், 7,846 கோடி மதிப்பில் மீட்கப்பட்டுள்ளன. 12,150 திருக்கோவில்களுக்கு உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது அந்த வகையில் திருப்பணிகளுக்கு அனுமதி என்று எடுத்துக் கொண்டால் 27 ஆயிரத்து 563 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3840 கோடி மதிப்பிலான 14 ஆயிரத்து 594 பணிகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலில் பெருகிவரும் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப 57 கோடி ரூபாய் செலவில் திருத்தணியில் பாதை விரிவுபடுத்தவும், சிறுவாபுரியில் 67 கோடி ரூபாய் செலவில் சாலையை அகலப்படுத்தவும் அரசு மானியமாக 127 கோடி ரூபாய் அறிவித்துள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தில் மிக உயரமான முருகன் சிலை மருத மலைகளில் திண்டல் பகுதியிலும் செய்யார் பகுதிகளிலும், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்பட்டு அந்தப் பணிகள் மிக விரைவில் நடைபெற இருக்கிறது. அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகம் திட்டத்தின் கீழ் 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் ஆணுக்கு பெண் சமம் என்ற வகையில் 12 பெண் ஓதுவார்கள் நியமித்து உள்ளோம்,
ஆடி மாதத்தில் அம்மன் கோவில் பயணம், அறுவடை முருகன் கோவில் பயணம், புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில் ஆன்மீக பயணத் திட்டம், உள்ளிட்ட பல பயணத்திட்டங்கள் இந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது இது முதியவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த காலத்தில் ஏளனமாக பார்க்கப்பட்ட இந்த துறையை அதிகாரிகளின் முழு முயற்சியாலும் ஒத்துழைப்பினாலும் பல சாதனைகள் படைத்து வரும் துறையாக மாறி உள்ளது.
இன்றைய தீர்ப்பு பொருத்தவரையில் தடைகள் பல இருந்தாலும் அதனை தகர்த்து எறிகின்றவர் முதலமைச்சர். இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என பிம்பம் கட்டமைக்கப்பட்டது அதனை அடித்து நொறுக்கும் வகையில் இதுவரை கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மேலும் மேலும் எங்களின் அறப்பணிக்கு உந்துதலாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.