“ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” - பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!
சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, அவர் அமைச்சர் பதவியை இழந்தார். இதை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. தமிழ்நாடு ஆளுநர் உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளார். பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுத்தி வைத்த பின், அவர் குற்றவாளி தான் என ஆளுநர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது. ஆளுநருக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் காட்டமாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று மாலை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (22.03.2024) பிற்பகல் 3.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில காலங்களாக ஜனநாயகம் சிதைக்கப்படுவதையும், கூட்டாட்சி தத்துவம் சீர்குலைக்கப்படுவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இறையாண்மை பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வுகள் நடந்ததும் அனைவரும் அறிந்ததே.
On behalf of the people of Tamil Nadu, I thank the Hon'ble Supreme Court, the custodian of the Constitution, for its timely intervention & upholding the spirit of the Constitution and saving the democracy.
In the last decade, the people of #INDIA witnessed the dithering of… pic.twitter.com/zthecHWbXL
— M.K.Stalin (@mkstalin) March 22, 2024
இந்நிலையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டு அத்துடன் பொன்முடி அமைச்சராக பதவியேற்ற புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.