“விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்கு நன்றி” - இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த தோனி!
விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்கு நன்றி என இந்தியா டி20 உலகக்கோப்பையை வெற்றதற்கு முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நேற்று (ஜூன் 29) நடைபெற்றது.கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே குவித்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.மேலும் 17 வருடகால இந்தியர்களின் ஏக்கத்தையும் தீர்த்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வையும் அறிவித்தனர் கிரிக்கெட் ஜாம்பவன்களான ரோகித் மற்றும் கோலி.
தொடர்ந்து இந்தியாவின் இந்த மாபெரும் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளையும், மகிழ்வையும் தெரிவித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
“உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024 போட்டியின் போது என் இதயத் துடிப்பு அதிகரித்து பின்பு மீண்டும் அமைதி அடைந்தது. பொறுமையுடனும், தன்னம்பிக்கையுடன் இதனை செய்து முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு இந்தியாவிலும், உலகின் வெவ்வேறு பகுதியிலும் உள்ள இந்தியர்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துகளும். விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.