For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“#Thangalaan படத்தை வெளியிட தடையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

03:53 PM Aug 14, 2024 IST | Web Editor
“ thangalaan படத்தை வெளியிட தடையில்லை”   சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1 கோடியை சொத்தாட்சியர் கணக்கில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா செலுத்தியதால் தங்கலான் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Advertisement

சென்னையை சேர்ந்த அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவர், பலரிடம் பணத்தை பெற்று அதனை திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு கடனாக கொடுத்திருந்தார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அவர் காலமானார். இதனால் அவரின் சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருவதோடு, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரின் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல்ராஜா, கடந்த 2013-ம் ஆண்டு ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா தனது கடன் தொகைக்கு, 2013-ம் ஆண்டு முதல் 18% வட்டியுடன் சுமார் ரூ.26 கோடியே 34 லட்சம் தர வேண்டும் என சொத்தாட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு, தங்கலான் படத்தை வெளியிடும் முன், ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர். அதேபோல, அடுத்த படமான கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து பட வெளியீட்டுக்கு முன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆக. 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதன்படி இன்று விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1 கோடியை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனவே, தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என படத்தை வெளியிட அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement