"தங்கலான்" ரிலீஸ் - ரூ.1 கோடி டிபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு நிபந்தனை!
தங்கலான் திரைப்படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : பீகார் பாபா சித்தேஸ்வர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 9 பேர் படுகாயம்!
இந்நிலையில், அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் திரைப்படத் தயாரிப்பாளரும் ஸ்டூடியோ கிரீன் உரிமையாளருமான ஞானவெல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டது.
மேலும் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டிபாசிட் செய்யவும் ஆணையிட்டது. பணம் டிபாசிட் செய்தது குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் உத்தரவிட்டு, இந்த வழக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.