#TETOJAC Protest... பள்ளிகள் வழக்கம் போல் இயங்க வேண்டும் - #தமிழ்நாடு அரசு!
அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெற வேண்டும் என மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 243 ஐ வாபஸ் பெற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது எனவும், அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
இன்று தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெற வேண்டும். எந்தவொரு பள்ளியும் ஆசிரியர்களின்றி இயங்காமல் இருக்கக் கூடாது. மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணியில் எவ்வித தொய்வுமின்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கூறிய அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து, இன்று தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளும் இயங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்கூறிய அறிவுரைகளை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.