#Pakistan-க்கு எதிரான டெஸ்ட் | மிரட்டிய ஹாரி புரூக், ஜோ ரூட்… இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தடுமாறி வரும் நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷபீக் 102 ரன்களும், ஷான் மசூத் 151 ரன்களும், ஆகா சல்மான் 104 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் க்ராவ்லி 64 ரன்களுடனும், ஜோ ரூட் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து, நேற்று (அக்.9) 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்களான க்ராவ்லி 78 ரன்களிலும், அடுத்து வந்த பென் டக்கட் 84 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து ஆடிய ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 492 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 176 ரன்களும், ஹாரி புரூக் 141 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று (அக்.10) நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஹாரி புரூக் 317 ரன்களுடனும், ஜோ ரூட் 262 ரன்களுடனும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் எடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி, பாகிஸ்தான் அணி வீரர்களான அப்துல்லா ஷபீக் ரன் எதுவும் எடுக்காமலும் , சைம் ஆயுப் 25 ரன்களுடனும், ஷான் மசத் 11 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து களமிறங்கிய ஆகா சல்மான் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 4வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்தது. ஆகா சல்மான் 41 ரன்களும், அமீர் ஜமால் 27 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். மேலும், 5வது நாள் ஆட்டம் நாளை (அக்.11) நடைபெறும் நிலையில் இங்கிலாந்து அணி மீதமுள்ள 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் எளிதாக வெற்றியைப் பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.