திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது...!
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால் நேற்று மாலையில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 144 தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்தார். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்றி அது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நீதிமன்ற உத்தரவு படி மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் காவல்துறை தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதால் தீபம் ஏற்று அனுமதி இல்லை என்று காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினரிடம் நயினார் நாகேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்