எல்லையில் பதற்றம் : பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் - அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வீரியமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கடந்த ஒரு மாதமாக, அஸ்ஸாம் முழுவதும் ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் மூலம் பிஹுவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளோம். உற்சாகமான பங்கேற்பு மற்றும் பங்களிப்புகளுக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
இருப்பினும், இந்த பண்டிகை காலத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மே 10 முதல் திட்டமிடப்பட்ட மீதமுள்ள அனைத்து பிஹு நிகழ்வுகளையும் தயவுசெய்து ரத்து செய்யுமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த துடிப்பான கொண்டாட்டத்தை அது கொண்டாடப்பட்ட அதே ஒற்றுமை மற்றும் மனப்பான்மையுடன், ஒரு அழகான முடிவுக்குக் கொண்டுவருவோம்". இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.