தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து - வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று(பிப்.22) தண்ணீர் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 14 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு பொறியாளர்கள், இரண்டு எந்திர ஆபரேட்டர்கள் உட்பட 8 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அம்மாநில அரசும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரிடம், மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்யவிருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தெலுங்கானாவில் சுரங்கப்பாதை கூரை இடிந்து விழுந்த செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் உள்ளே சிக்கியிருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன”
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.