தெலுங்கானாவில் ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பகுதி மீராபயேந்தர் நகர போலீசார் போதை பொருள் விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்தனர். அந்த நபரிடமிருந்து சுமார் 200 கிராம் எடையும் 25 லட்ச ரூபாய் மதிப்பும் உள்ள எம்டி ரக போதை பொருளை கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது போதைப் பொருளின் உற்பத்தி மையமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள செர்ல்லப்பள்ளி அமைந்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
செர்ல்லப்பள்ளியில் உள்ள தொழில் பேட்டையில் ரசாயன தயாரிப்பு நிறுவனம் போல் செயல்பட்டு போதை பொருள் உற்பத்தி செய்து வந்த அந்த தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 32 ஆயிரம் லிட்டர் எம்டி ரக போதைப் பொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்த தொழிற்சாலை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
முக்கிய குற்றவாளியான ஐஐடி பட்டதாரி தனக்கு கல்வி மூலம் கிடைத்த தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி போதை பொருள் தயார் செய்து நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்தி விற்பனை செய்து வந்ததும் கைது செய்யப்பட்ட கும்பலுக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் போதை பொருள் தயாரிப்பதற்காகவே தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.