தெலங்கானா சுரங்க விபத்து - 16 நாட்களுக்கு பிறகு ஒரு உடல் மீட்பு!
தெலங்கானா மாநிலம் நாகர்குனூலில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி 14 கிலோ மீட்டர் தூரத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் பணியிலிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த திட்ட பொறியாளர் மனோஜ் குமார், கள பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஊழியர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா ஜெஸ். சந்தோஷ் சாகு, அனுஜ் சாகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆபரேட்டர் சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஆபரேட்டர் குர்பிரீத் சிங் ஆகியோர் சிக்கிக்கொண்டர்.
இதையடுத்து சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட 8 பேரை மீட்கும் பணியில் தேசிய மற்றும் அம்மாநில பேரிடர் மீட்பு பணியினர் ஈடுபட்டனர். இருப்பினும் சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பிறகு சிக்கிக்கொண்டவர் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வந்தனர்.
மீட்பு பணிக்கு ரோபோக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா நீர்ப்பாசன அமைச்சர் என் உத்தம் குமார் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். பின்பு கேரள காவல்துறையின் பெல்ஜிய மாலினாய்ஸ் இன நாய்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மீட்பு பணி இன்றுடன்(மார்ச்.09) 16வது நாளை எட்டியுள்ள நிலையில், சுரங்கப்பாதையில் இருந்து ஒரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கர்னூல் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.