பீகாரின் "இணைந்த கைகள்": ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் புகைப்படங்கள் வைரல்!
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் இந்திய நீதிப் பயணத்தில் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து அசாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து பீகாரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பீகார் மாநிலத்திற்குள் நுழைந்த முதல் நாளே ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஆனாலும் ராகுல்காந்தி தொடர்ந்து பீகாரில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றுடன் பீகார் பயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி, மாலை உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைய உள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இன்றைய பயணத்தில் இணைந்த பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், சாசராம் பகுதியில் இருந்து ராகுலின் காரை ஓட்டிச் சென்றார். பிற்பகல் 2 மணியளவில் கைமூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும், தேஜஸ்வியும் உரையாற்றவுள்ளனர்.
ராகுல் காந்திக்கு, பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கார் ஓட்டிய புகைப்படங்கள் வைராகி வருகிறது. இந்த புகைப்படங்களை தேஜஸ்வி யாதவும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.