போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!
பஞ்சாப் - ஹரியானா எல்லை பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசியதால் பதற்றம் நிலவியது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஷம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானவின் எல்லைப்பகுதி ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். இது அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.