“ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்க வேண்டும்!” - மத்திய நிதியமைச்சருக்கு நிதின் கட்காரி கடிதம்!
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமீயங்கள் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதி உள்ளார்.
நாகபுரியைச் சேர்ந்த எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தினர், அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியைச் சந்தித்துப் பேசினர். அப்போது காப்பீட்டுத் துறை குறித்த சில கோரிக்கைகளையும் அவர்கள் நிதின் கட்கரியிடம் முன்வைத்தனர். அதில் ஒருவர்,
“தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், தனது குடும்பத்தினர் பொருளாதாரரீதியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுள் காப்பீடு எடுக்கின்றனர். அதற்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் 18 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது. எனவே சாமானிய, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுள், மருத்துவக் காப்பீட்டு பிரிமீயத்துக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக நிதின் கட்காரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த ஜூலை 28ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
“மூத்த குடிமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரிமீயங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18 சதவீத வரி என்பது சமூக ரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக உள்ளது. இந்த துறையின் வளர்ச்சி சமூகத்திற்கு அவசியமானது.
பிரிமீயத்தின் மீது ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம். குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக வாழ்க்கையின் நிச்சயமற்ற அபாயத்தை உள்ளடக்கிய நபர். இந்த அபாயத்திற்கு எதிராக காப்பீட்டை வாங்குவதற்கான பிரீமியத்திற்கு வரி விதிக்கப்படக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.