தவெக மாநாடு - பாதுகாப்பு காரணங்களுக்காக கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு!
கர்ப்பிணிகளும் குழந்தைகளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தவெகவும் ஒப்புக்கொண்டு, தொண்டர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தவெக நிர்வாகம், காவல்துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளித்துள்ளது.
தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில், பாரபத்தி பகுதியில் உள்ள மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 25,000 பெண்கள் உட்பட சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 237 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடலும், 217 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டிற்கு அனுமதி கோரி தவெக அளித்த மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக, காவல்துறை 42 கேள்விகளை எழுப்பியது. இந்தக் கேள்விகள் பெரும்பாலும் மாநாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை மையமாகக் கொண்டிருந்தன. முக்கியமாக, அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கும் விதமாக, கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
காவல்துறையின் பாதுகாப்பு சார்ந்த கவலைகளை ஏற்றுக்கொண்ட தவெக, மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் உடன் அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும், போக்குவரத்து ஒழுங்குமுறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
இந்த மாநாடு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தவெக-வின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.