உலகின் செல்வாக்குமிக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த ‘டாடா’, ‘ரிலையன்ஸ்’!
‘டைம்’ பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ மற்றும் ‘டாடா’ நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டைம்’ பத்திரிக்கை நிறுவனம் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ மற்றும் ‘டாடா’ நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக ரிலையன்ஸ் டைட்டன் என்ற பட்டியலில் இடம்பெற்றும் சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது. 2021இல் முதன்முதலாக பட்டியல் வெளியானபோது ஜியோ பிளாட்பார்ம் அதில் இடம் பெற்றது. மேலும் இந்த பட்டியலில் மற்றொரு இந்திய நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ இடம் பெற்றுள்ளது.
58 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி, பாலியெஸ்டர் தொழிலை தொடங்கிய திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இப்போது இந்தியாவின் மாபெரும் தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் நிகர மதிப்பு ரூ. 20 லட்சம் கோடிகளாகும்.
எஃகு, மென்பொருள், கடிகாரங்கள், ரசாயனங்கள், உப்பு, தானியங்கள், குளிர் சாதனங்கள், ஃபேஷன் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று பலதர வணிகத்தைக் கொண்டுள்ள டாடா குழுமம் 1868-இல் நிறுவப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.36,500 கோடியாகும்.
தட்டம்மை, போலியோ மற்றும் எச்பிவி உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 350 கோடி டோஸ்களை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.