ஜாம்பி பூஞ்சையால் பாதிக்கப்பட்ட டரான்டுலாஸ்... வீடியோ #Viral!
வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் கெட்டோலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாம்பி பூஞ்சையால் பாதிக்கப்பட்ட டரான்டுலாஸின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பூஞ்சைத் தொற்று மனிதர்களை ஜாம்பிகளாக மாற்றுமா? எனும் சந்தேகம் பல காலங்களாகவே மனிதர்களிடையே நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. பூஞ்சைகளால் மனிதர்களை கட்டுப்படுத்த இயலாது.
ஆனால் பூஞ்சைகளின் ஆற்றல் மிகப்பெரியது. பூஞ்சைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. உண்ணக்கூடிய காளான்கள் முதல் ஒட்டுண்ணிகள் வரை பூஞ்சைகளின் பட்டியல் மிகப்பெரியது. கார்டிசெப்ஸ் மற்றும் ஓபியோகார்டிசெப்ஸ் ஒட்டுண்ணி பூஞ்சை இனங்களின் இருப்பு நிஜமானது. ஜாம்பி என அழைக்கப்படும் கார்டிசெப்ஸ் பூஞ்சை இனங்கள், ஒரு பூச்சி இனத்தை மட்டுமே பாதிக்கும்.
இது ஒரு பூச்சியிலிருந்து மற்றொரு பூச்சிக்கு பரவாது. இதனால் மனிதனுக்கு பெருமளவில் பாதிப்பு இருக்காது. இந்த கார்டிசெப்ஸ் பூஞ்சைகள் பெரும்பாலும் சிலந்தி மற்றும் எறும்பு இனங்களையே தாக்குகின்றன. பிரபல வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி லாஸ்ட் ஆஃப் அஸ் காரணமாக இந்த கார்டிசெப்ஸ் பூஞ்சை வகை ஜாம்பி பூஞ்சை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் கெட்டோலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஜாம்பியால் பாதிக்கப்பட்ட சிலந்தியை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
கார்டிசெப்ஸ் என்பது பூஞ்சை இனமாகும். இது முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை தாக்குகிறது. முதலில் அவற்றின் நரம்பு மண்டலத்தை தாக்கி, அவற்றின் உடலை சாப்பிட ஆரம்பிக்கிறது. இந்த குறிப்பிட்ட வகை கார்டிசெப்ஸ் டரான்டுலாஸை(சிலந்தி வகை) பாதிக்கிறது. இவை அரிதானவை. கார்டிசெப்ஸால் பாதிக்கப்பட்ட டரான்டுலாவை நான் பார்ப்பது இது மூன்றாவது முறை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. மேலும் பலதரப்பட்ட கருத்துகளை பெற்று வருகிறது.
யார் இந்த கிறிஸ்டோபர் கெட்டோலா?
அமேசானின் மழைக்காடுகளை கண்காணிக்கும் அமைப்பான Fauna Forever-ல் தலைமை கள ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கெலோட்டின் இன்ஸ்டாகிராம் பக்கமானது பல உயிரினங்களால் நிரம்பியுள்ளது.