“தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” - சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் திசை திருப்பும் அரசியல் எடுபடாது என தனது எக்ஸ் தள பதிவு குறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு திசை திருப்பும் ஒரு அரசியலை செய்திருக்கிறார். புராணங்கள், இதிகாசங்களின் பின்னணியில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவலை சொல்லலாம். அது அவரது உரிமை. ஆனால் இதற்கு மாற்றாக சொல்கிற கருத்துக்களை அரசியல் தீய கருத்துக்கள், பிரிவினை வாத சக்திகள் என்றும் சொல்லியிருக்கிறார். இது முற்றிலும் திசை திருப்புகிற அரசியல். இது தமிழ்நாட்டில் எடுபடாது.
இன்னும் சொல்ல போனால் தமிழ்நாட்டின் ஆதி மரபு, முன்னோர் வழிபாடு. அதனால் தான் கீழடியில் 20 ஆயிரம் பொருள் கிடைத்திருக்கிறது. அதில் ஒரு பொருள் கூட பெரு மதங்கள் அடையாளம் சார்ந்த பொருள் கிடையாது. எனவே தான் இன்று வரை அவருக்கு கசக்கிறது. அவர் இன்று வரை கீழடி அருங்காட்சியகத்திற்கு மறுப்பு தெரிவிப்பது அதற்காக தான். 35 முறை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மதுரைக்கு வருகை தந்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட கீழடி அருங்காட்சியகத்திற்கு போனது இல்லை.
உணவே தலை என்பது தான் தமிழின் கதை. அதுதான் தமிழனின் வரலாறு. தமிழும், திமிழுமே நமது பேரடையாளம். இதற்கு எதிரான நிர்மலா சீத்தாராமனின் திசை திருப்பும் கருத்து எடுபடாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்தார்.