இலங்கைக்கும் போதைப்பொருளை கடத்தினாரா ஜாபர் சாதிக்? தீவிர விசாரணையில் NCB அதிகாரிகள்!
ஜாபர் சாதிக் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இந்நிலையில் மார்ச் 9 ஆம் தேதி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக்கிடம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை - கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
முன்னதாக, மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனிற்கு ஜாபர் சாதிக்கை அழைத்து சென்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியாவிற்கு போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தி இருந்தது விசாரணையில் ஏற்கனவே தெரியவந்தது.
தற்போது, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கும் ஜாபர் சாதிக் போதைப்பொருளை கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை மையமாக வைத்து அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.