#Diwali பண்டிகை | சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2.31 லட்சம் பேர் பயணம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் 2.31 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே, கல்வி மற்றும் வேலைக்காக சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 28ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அதனுடன் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பலரும் தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதையும் படியுங்கள் : LCU-வில் ராகவா லாரன்ஸ் | வீடியோ வெளியிட்டு ‘Benz’படக்குழு அறிவிப்பு!
இந்நிலையில், சென்னையிலிருந்து நேற்று வழக்கமாக இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 1,967 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 4,059 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகள் மூலம் 2,31,363 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்வதற்காக இதுவரை 1,43,862 பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.