தமிழ்நாட்டில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (டிச.10) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு அரபிக் கடல், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது டிசம்பர் 10-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 10 முதல் 15 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.