தமிழ்நாடு, ஆந்திராவின் கூலிப்படை தலைவன்...யார் இந்த #Rowdy சீசிங் ராஜா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட, பிரபல ரௌடி சீசிங் ராஜா குறித்து இங்கு காண்போம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் ஜூலை
மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையை அடுத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து சென்னையின் காவல் ஆணையர் மாற்றம் செய்யப்பட்டார். காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. இந்த கொலையில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 3மாதங்களாக பல முக்கிய குற்றவாளிகள் இதில் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரபல ரௌடி சீசிங் ராஜா இன்று காலை காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் ஆணையராக அருண் பதவியேற்றதில் இருந்து இது மூன்றாவது என்கவுன்ட்டர் ஆகும்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு
விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு,
வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ்,
மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ்
நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி
சேகர், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும்,
பிரபல ரௌடிகள் பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில்
சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில், சீசிங்
ராஜா உள்ளிட்ட ரௌடிகளையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை நேற்று கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மறைத்து வைத்துள்ள ஆயுதத்தை எடுப்பதற்காக நீலாங்கரை அக்கரை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சீசிங் ராஜா போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில், சீசிங் ராஜா உயிரிழந்ததாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே ஜூலை மாதம் 5 ஆம் தேதி ரௌவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், 2-வது நபராக சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
யார் இந்த சீசிங் ராஜா?
- ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட நரசிம்மன் – அங்கம்மா தம்பதியின் மகன் ராஜா.
- சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்த ராஜா, 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கராத்தே மாஸ்டர் ஆக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது நண்பர்களுக்காக அடிதடி போன்ற பிரச்னைகளில் ஈடுபட்டுள்ளார்.
- பின்னர் வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை அடாவடியாக பறிமுதல் செய்வதுதான் அவரது பணி. அதனால் அடைமொழி பெயராக சீசிங் ராஜா என பெயர் வந்தது. அப்போதே தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபல ரௌடியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ராஜா, மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து செய்வது என ரௌடி சாம்ராஜ்ஜியத்துக்குள்ளும் காலடி வைத்தார்.
- ஆந்திராவில் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய சீசிங் ராஜா, நாளடைவில் பெரும் ரௌவுடியாக உருவெடுத்தார்.
- தொடர்ந்து சென்னை மற்றும் ஆந்திரா என இரு மாநிலங்களிலும் கொலை செய்து, கூலிப்படை தலைவனாக மாறினார்.
- சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள், ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- மேலும் 7 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
- போலீசாரின் நெருக்கடி காரணமாக, ஆந்திராவில் இவரது மனைவிகள் வீட்டில் பதுங்கியபடி, சென்னையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
- கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய கூலிப்படை தலைவனாக உருவெடுத்த சீசிங் ராஜா, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து, சிங்கம் பட பாணியில் ஆட்களை கடத்தி, பணம் கேட்டு மிரட்டும் செயலிலும் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் என போலீசார் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.