ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார் தமிழிசை; மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா?
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இவர் 1999-ல் பாஜக உறுப்பினரானார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழக பாஜக மாநில தலைவர் வரை உயர்த்தியது. இவரது தாமரை மலந்தே தீரும் என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களாலும் ரசித்து பார்க்கப்பட்டதாகும்.
பாஜக தலைவர் to ஆளுநர்:
தமிழக பாஜக சார்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து களமிறங்கிய தமிழிசைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து தமிழிசையை கை விட்டு விடாத பாஜக, அவரை தெலங்கானா மாநில ஆளுநர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. அவரது சிறப்பான பணியை பாராட்டும் வகையில் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் பதவியையும் வழங்கியது. ஆளுநராக இருப்பவர் அரசியலில் இருந்து விலகி இருப்பார். ஆனால் தமிழிசையோ தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்தினார். பல்வேறு பிரச்னைகளின் போது திமுக அரசை விமர்சித்து கருத்து கூறினார். இதனால் தமிழிசைக்கு அரசியல் ஆர்வம் விட்டுவிடவில்லையென பரவலாக கூறப்பட்டது.
மீண்டும் அரசியல் களத்தில் தமிழிசை சவுந்தரராஜன் :
ஆளுநர் தமிழிசை தெலங்கானா மாநிலம் மட்டுமில்லாமல் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் தினந்தோறும் கலந்து கொண்டு வருகிறார். ஆனால், இந்தமாதம் மாதம் யாருக்காகவும் நேரம் ஒதுக்கவில்லையென கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்குதமிழிசை சௌந்தரராஜன் அனுப்பியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட களம் இறங்க இருப்பதாகவும், சென்னை அல்லது புதுச்சேரி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.