”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
பீகார் மாநிலத்தில் சட்டபேரவைத் தேர்தல் விரைவல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பணியின் போது ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.
இதன் நடுவே பீகாரில் நடத்தப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆதார், வாக்காளர் அட்டை, அடையாள ரேஷன்அட்டை போன்ற ஆவணங்களை செல்லுபடியாகும் ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரீசிலிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ”வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் போது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்றும் ஆதார் என்பது ஒரு நபரின் அடையாள சான்று மட்டுமே” எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், ”2016 சட்டப் பிரிவு 9ன் படி, ஆதார் எண் குடியுரிமை அல்லது இருப்பிடம் போன்றவற்றுக்கான சான்று இல்லை அரசமைப்புச் சட்டப் பிரிவு 326-ன் கீழ் சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் ஆதார் உதவாது என்றும், ஆதாரை, பிற ஆவணங்களுடன் கூடுதலாக மட்டுமே பயன்படுத்த முடியும்” எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.