நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா சரத்குமார் வாழ்த்தியதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்த போது அவர்கள் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் இந்த முறை ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நாளை மறுநாள் அதாவது மார்ச் 27ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இப்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதே நேரத்தில், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்த பிறகு வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே தமிழிசையைப் பார்த்தவுடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அருகே கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அருகே இருந்த நிலையில், அவர்களுக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பல பகுதிகளில் திமுக அதிமுக இடையே சிறு விஷயங்களுக்குக் கூட சண்டை ஏற்படும் நிலையில், இங்கே இரு வேட்பாளர்களும் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் ஆரோக்கியமான அரசியல் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.
இதே போன்று, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி.மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இதனால் விருதுநகர் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலனிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் ராதிகா சரத்குமாரும், விஜயபிரபாகரனும் சென்றனர். இதனால் இருவரும் எதிரெதிரே சந்தித்துகொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது, ராதிகா சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.