தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “கவனக்குறைவால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” - #DDTamil அறிக்கை!
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரம் தொடர்பாக கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் டிடி தமிழ் மன்னிப்பு கோரியுள்ளது.
தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும், என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதேபோல் எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிடி தமிழ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இதனை யாரும் வேண்டும் என்று செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.