தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” - #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மீது இனவெறிக் கருத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை காட்டுவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும், என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதேபோல் எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டனத்திற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு ராஜ்பவன் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாவது,
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஒரு வருந்தத்தக்க ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என் மீது இனவெறிக் கருத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை காட்டுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதுமாக வாசிப்பேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். பயபக்தியோடும், பெருமையோடும், துல்லியத்தோடும் செயல்படுங்கள்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் தமிழ்நாடு மற்றும் உலகின் பல நாடுகளில் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தை பரப்புவதற்காக பல நிறுவனங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பிரதமர் மோடி தமிழை ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட கொண்டு சென்றார். ஒரு பெருமைமிக்க இந்தியனாக, பழமையான மற்றும் வளமான மொழியான தமிழை, நாட்டின் பிற மாநிலங்களில் பரப்புவதற்கு எண்ணற்ற கணிசமான முயற்சிகளை நானே மேற்கொண்டுள்ளேன்.
வடக்கு கிழக்கில் தமிழ் பரவலுக்காக அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ படிப்பை அமைக்க உள்ளது. இனவாதக் கருத்தைச் சொல்வதும், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் துரதிஷ்டவசமானது மற்றும் மலிவானது. மேலும், முதலமைச்சரின் உயர் அரசியல் சாசனப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கிறது. அவர் தனது இனவெறி கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளுடன் பொதுமக்களிடம் விரைந்ததால் நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.