சுந்தர் பிச்சை, ஜூக்கர்பர்க்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர் யார் தெரியுமா?
தமிழர் சுந்தர் பிச்சை, ஜூக்கர்பர்க்கை விட அதிக ஊதியம்பெறும் இந்தியர் யார் தெரியுமா? உலகமே உற்று நோக்கும் அந்த இந்தியர் குறித்து பார்க்கலாம்.
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் தலைமை பொறுப்பை அலங்கரிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர் சுந்தர் பிச்சையோ அல்லது சத்யா நதெல்லாவோ கிடையாது. பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிகேஷ் அரோரா தான் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற அந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே நபர்.
தரவு பகுப்பாய்வு நிறுவனமான C-Suite Comp கடந்த 24.06.2024 அன்று அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலை வெளியிட்டது. அதில் தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிகேஷ் அரோராவை பொறுத்தவரை 151.43 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.1,260 கோடிக்கும் அதிகம். அதேநேரம், மார்க் ஜுக்கர்பெர்க் 24.4 மில்லியன் டாலரும், சுந்தர் பிச்சை 8.8 மில்லியன் டாலரும் சம்பளமாக பெறுகின்றனர்.
இந்நிலையில் யார் இந்த நிகேஷ் அரோரா என்று பார்க்கலாம்.
உத்தப் பிரதேசத்தின் காஜியாபாத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நிகேஷ் அரோரா. இவரது தந்தை இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர் என்பதால், தனது பள்ளிப் படிப்பை விமானப் படை பள்ளியான டெல்லியில் உள்ள ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியில் முடித்தார் நிகேஷ். ஐஐடி வாராணசியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ-வும் முடித்தார்.
கூகுள் நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றியவர். பிறகு சாப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தார். சாப்ட் பேங்க் நிறுவனத்தில் இணையும் போது துணைத் தலைவராக இருந்தார். அதன்பின்பு 2015ம் ஆண்டு மே மாதத்தில் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 35 வருட கால சாப்ட்பேங்க் வரலாற்றில் இந்த பதவி யாருக்கும் வழங்கப் படவில்லை. இந்நிலையில், 2016-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். தொடர்ந்து 2018ல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனம் சைபர் பாதுகாப்பில் செயல்பட்டு வரும் நிறுவனமாகும்.