தமிழ்ப் புத்தாண்டு - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
"உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் மீதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மத்திய பாஜக அரசு கடுமையான படையெடுப்பை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் சீர்குலைவு செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இதை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன. இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
மத்திய பாஜக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்தாலும், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். மத்திய பாஜக அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இந்த விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.