“பாமகவின் 45 தீர்மானங்களை நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்” - அன்புமணி ராமதாஸ் பேச்சு!
பாமகவின் 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டிற்காக, பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து வரும் உழவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகளை ஒன்று திரட்டி இந்த மாநாட்டை பாமக நடத்துகிறது. விவசாயிகளுக்காக பாமக நடத்தும் இந்த மாநாடு பிற கட்சிகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநாட்டு மேடையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது,
“தமிழ்நாட்டில் சமீபகாலத்தில் இப்படி ஒரு உழவர் மாநாடு நடந்தது கிடையாது. இந்த மாநாட்டை யாருக்கும் நிரூபிப்பதற்காக நடத்துவது கிடையாது. மாறாக உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படுகிறது. எங்களைப் போன்று தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் கிடையாது. உழவர்கள் பற்றி அரசியல் கட்சிகளுக்கு கவலை கிடையாது. ஆளும் திமுக ஆட்சி முதலாளிகளுக்காக நடத்தப்படும் ஆட்சி.
இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்துகின்ற சக்தி நமக்கு மட்டும் தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்றால், 2, 3 மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள். அதேபோல், இத்தனை விவசாயிகளும் சென்னை நோக்கி செல்ல வேண்டும். உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள். அதுதான் என் ஆசை. பாமக நிறுவனர் ராமதாஸ் என்று கூறுகிறாரோ அன்று அனைத்து வாகனங்களிலும் வாருங்கள்.
உழவர்களுக்காக 3 துறை இருக்கிறது. இந்த 3 துறையும் சேர்ந்து GST-யை நிர்ணயிக்கிறது. தமிழ்நாட்டில் 63% விவசாயிகள். அவர்கள் பொருளாதார பங்களிப்பு 11%. உற்பத்தி துறையில் 3%, சேவைத்துறையில் 46%. உழவர்கள் முன்னேறாமல் இருக்க முக்கிய காரணம் அரசாங்கம் உழவுகளுக்கு ஏற்ற கொள்கையை கொண்டு வருவது கிடையாது.
அதிக சுயமரியாதை உள்ளவர்கள் விவசாயிகள். சோறு போடும் கடவுள் விவசாயிகள்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம். 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பாவப்பட்ட ஜென்மங்களாக உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் அடிப்படை விவசாயி.
விவசாயிகளுக்கு நன்மை செய்தது நீண்ட பட்டியில் உள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த கட்சியிலும் இது போன்ற பட்டியல் இல்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் நந்தன் கால்வாய் திட்டம் அமைக்க வேண்டும் என 45 ஆண்டு கால மக்கள் கோரிக்கை இதுவரை யாரும் அதை அமைத்தது கிடையாது. உழவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. டங்ஸ்டன் சுரங்கம் வரக்கூடாது என வரும் 27-ம் தேதி நானும் போராட்டத்தில் பங்கேற்பேன்“
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.