PhD படிக்க பதிவு செய்த பெண்களின் பட்டியல் - தமிழ்நாடு முதலிடம்..!
தேசிய அளவில் 2021-22 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் படிப்பதற்கு பதிவு செய்த பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பரிந்துரையின் படி அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டுகளை காட்டிலும் முனைவர் பட்டப் படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
இதையும் படியுங்கள் ; குரூப் 4 தேர்வுக்கான தேதி வெளியானது – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.!
தனியார் கல்லூரிகள், ஆய்வகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலரும் வேலையை விட்டுவிட்டு முழுநேர முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்கின்றனர். முழுநேர முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே தொழிற்கல்விப் பட்டப் படிப்பைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கும், அரசின் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி பணிக்கும் சேர முடியும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தபின் அனுமதி சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
இதையடுத்து, தேசிய அளவில் உயர்கல்வி தொடர்பாக மத்திய கல்வித்துறை சார்பாக முனைவர் பட்டப் படிப்பில் சேருவோரின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வித்துறையின் ஆய்வின் படி, தேசிய அளவில் 2021-22 ஆம் ஆண்டு முனைவர் பட்ட படிப்பில் அனுமதி சேர்க்கையின் மொத்த எண்ணிக்கை 2,12,522 என தெரிவித்துள்ளது. மத்திய கல்வித்துறையின் ஆய்வின் படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தேசிய அளவில் 2021-22 ஆம் ஆண்டு முனைவர் பட்ட படிப்பில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் முனைவர் பட்ட படிப்பில் அனுமதி சேர்க்கையின் மொத்த எண்ணிக்கை 28,867 யாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தேசிய அளவில் 2021-22 ஆம் ஆண்டு முனைவர் பட்ட படிப்பில் அதிகப்படியான பெண்கள் சேர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதது குறிப்பிடத்தக்கது. இந்த முனைவர் பட்ட படிப்பில் பெண்களின் மொத்த எண்ணிக்கை 15,410 பெற்று தமிழ்நாடு முதலிடம் என தகவல் தெரிவித்துள்ளது.